சித்தர் பாடல்கள் சீர்திருத்தப் பெட்டகம்! பகுத்தறிவுப் பாசறை! உயிர் உய்க்கும் ஒளிநெறி! சித்தருள் சித்தர் சிவவாக்கியர்! ஊன் உடம்பு ஆலயத்தை உள்ளவாறு உணர்ந்து உலகு உய்ய உணர்த்தும் உரவோர்! அவரின் இசை வடிவில் வெளிவந்த இருபது பாடல்களின் உரை விளக்கம் இது!
ஓடி ஓடி ஓடி ஓடி உட்க லந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்க ளும்க ழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணி றந்த கோடியே. (1)
நம் உள்ளத்திலே உறைந்திருக்கும் இறைவனை உணராமல் அவரை வெளியிலே தேடிக் கொண்டு இங்கு இருப்பாரா, அங்கு இருப்பாரா என்று ஓடி ஓடி அலைந்தும் அவர் எங்கிருப்பார் என்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்தும் நாள்கள் கழிந்து போக, இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று மனம் வாடி வாடி இறந்து போன மக்கள் இந்த உலகத்தில் எண்ணில்லாத பேர்கள்; கோடானு கோடி மக்கள்.
என்னி லேஇ ருந்த வொன்றை யான்அ றிந்த தில்லையே
என்னி லேஇ ருந்த வொன்றை யான்அ றிந்து கொண்டபின்
என்னி லேஇ ருந்த வொன்றை யாவர் காண வல்லரே
என்னி லேஇ ருந்தி ருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே, (2)
என் உள்ளத்திலே இருக்கின்ற இறைவனை இதுவரை நான் அறியாமல் இருந்து விட்டேன். என் உள்ளத்திலே இருக்கின்ற இறைவனை நான் உணர்ந்து அறிந்து கொண்டபிறகு என் உள்ளத்திலே இருக்கின்ற இறைவனைப் பற்றியும் என்னைப் பற்றியும் எண்ணி எண்ணி முழுமையாக அறிந்து கொண்டேன். என்போல தன்னுள் தங்கியிருக்கும் இறைவனை உணரும் வலிமை உடையவர் யார்?
நான தேது நீய தேது நடுவில் நின்ற தேதடா
கோன தேது குருவ தேது கூறி டும்கு லாமரே
ஆன தேது அழிவ தேது அப்பு றத்தில் அப்புறம்
ஈன தேது ராம ராம ராம என்னும் நாமமே. (3)
நான் என்பது ஏது? நீ என்பது ஏது? நம் உள்ளத்தில் நடுவில் இருக்கும் இறையால் அல்லவா? இதை உணராமல் கோன் உயர்ந்தது, குரு உயர்ந்தது என்று கூறும் இழிந்தோரே! இந்த உலகம் ஆனது எதனால்? அழிவது எதனால்? அப்பாலுக்கு அப்பால் இருந்து காக்கப்படுவது எதனால்? இராம இராம இராம என்னும் திருப்பெயரால் அல்லவா?
அஞ்செ ழுத்தி லேபி றந்து அஞ்செ ழுத்தி லேவளர்ந்(து)
அஞ்செ ழுத்தை ஓது கின்ற பஞ்ச பூத பாவிகாள்
அஞ்செ ழுத்தில் ஓர்எ ழுத்(து)அ றிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்ப லத்தில் ஆடுமே. (4)
நாங்கள் ஐந்தெழுத்தில் பிறந்தவர்கள், ஐந்தெழுத்தில் வளர்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்லி நாளும் ஐந்தெழுத்தை ஓதுகின்ற ஐம்புலன்களின் கட்டுப்பாடு இல்லாத பாவிகளே! இறைவனை வழிபடும் ஐந்தெழுத்தில் முதல் எழுத்தாகிய சி என்பதன் பொருளை மட்டும் உணர்ந்து கூறும் வல்லமை பெற்றால் அஞ்சாதீர்கள், அஞ்சாதீர்கள் என்று ஆண்டவன் நம் நெஞ்ச அரங்கத்தில் ஆட மாட்டானா?
இடத்த துன்கண் சந்தி ரன்வ லத்த துன்கண் சூரியன்
இடக்கை சங்கு சக்க ரம்வ லக்கை சூலம் மான்மழு
எடுத்த பாதம் நீள்மு டி எண்தி சைக்கும் அப்புறம்
உடல்க லந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரே? (5)
சந்திரனை இடக் கண்ணாகவும் சூரியனை வலக் கண்ணாகவும் கொண்டு இடக் கையில் சங்கு சக்கரத்தையும் வலக் கையில் சூலம், மான், மழுவையும் ஏந்தித் தூக்கிய பாதமும் நீண்ட சடை முடியுமாக எட்டுத் திசைகளுக்கும் அப்பாற்பட்ட அந்தப் பரம்பொருள் எல்லா உயிர்களின் உடலிலும் கலந்திருக்கும் மாயத்தைக் கண்டுணரக்கூடிய வலிமை பெற்றவர்கள் யார்?
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்ற தல்ல அற்றதல்ல
பெரிய தல்ல சிறிய தல்ல பேசும் ஆவி தானுமல்ல
அரிய தாகி நின்ற தன்மை யாவர் காண வல்லரே. (6)
இறைவன், வடிவத்தோடும் வடிவம் இல்லாதும், ஒன்றை விரும்பிப் பற்றுக் கொண்டும் பற்றில்லாமலும், நெருக்கமாகவும் தொலைவாகவும், வேறானதாகவும் ஒன்றாகவும், பெரியதாகவும் சிறியதாகவும், பேசுகின்ற உயிராகவும் இல்லாதவன். இப்படி எளிதில் உணர்ந்து அறிய முடியாத இயல்பு படைத்த இறைவனைக் கண்டறியும் வல்லமை பெற்றவர்கள் யார்?
மண்க லம்க விழ்ந்த போது வைத்து வைத்த டுக்குவார்
வெண்க லம்க விழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நம்க லம்க விழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்க லந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே. (7)
மண்பானை உடைந்துவிட்டால் வேறு எதற்காவது பயன்படும் என்று எடுத்து வைப்பார்கள். வெண்கலப் பானை உடைந்துவிட்டால் கடையில் மாற்றிக் கொள்ளலாம் என்று பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள் ஆனால் நம் உயிர் போய்விட்டால் இந்த உடல் நாற்றம் அடிக்கும் என்று இடுகாட்டில் சென்று போட்டுவிடுவார்கள். மண்பானை, வெண்கலப்பானை, உயிர்ப் பானையாகிய உடல் ஆகிய மூன்றைப் பற்றிய மக்களுடைய எண்ணங்கள்தான் எவ்வளவு மாறுபட்டிருக்கிறது பாருங்கள்! இது என்ன மாயம்! மண்பானைக்கு இருக்கும் மதிப்பு, வெண்கலப் பானைக்கு இருக்கும் மதிப்புகூட மனித உடலுக்கு இல்லையே!
ஆன அஞ்செ முத்து ளே அண்ட மும் அ கண்டமும்
ஆன அஞ்செ ழுத்து ளே ஆதி யான மூவரும்
ஆன அஞ்செ ழுத்து ளே அகார மும்ம காரமும்
ஆன அஞ்செ ழுத்து ளேஅ டங்க லாவ லுற்றவே. (8)
ஐந்தெழுத்தில்தான் பல்வேறு உலகங்களும் ஒன்றான முழுமையும் உள்ளன. ஐந்தெழுத்தில்தான் மூன்று தெய்வங்களும் உள்ளன. ஐந்தெழுத்தில்தான் யகர மகர உயிர் நாடிகளான இடகலை பிங்கலை நாடிகள் உள்ளன. ஐந்தெழுத்தில்தான் ஆசைப்படுதலும் அடங்குதலும் உள்ளன.
நினைப்ப தொன்று கண்டி லேன் நீய லாது வேறிலை
நினைப்பு மாய்ம றப்பு மாய் நின்ற மாயை மாயையோ
அனைத்து மாய்அ கண்ட மாய்அ னாதி முன்அ னாதியாய்
எனக்குள் நீஉ னக்குள் நான்இ ருக்கு மாற தெங்ஙனே. (9)
நான் எப்போதும் நினைக்கின்ற ஒன்றைக் கண்டதில்லை. அது உன்னைத் தவிர வேறு இல்லை. உன்னை நினைப்பதும் மறப்பதுமாய் இருக்கின்ற மாயம் என்ன மாயமோ? உலகிலுள்ள அனைத்துமாய் முழுமையாய் தொடக்கமே இல்லாதவனாய் எனக்குள்ளே கலந்தவனாய் இருக்கின்ற உன்னை, உனக்குள் அடங்கி அடிமைப்பட்ட நான் எப்படி நினைத்து வழிபடுவேன்?
பண்டு நான்ப றித்தெ றிந்த பன்ம லர்கள் எத்தனை
பாழி லேசெ பித்து விட்ட மந்தி ரங்கள் எத்தனை
மிண்ட னாய்த்தி ரிந்த போது இறைத்த நீர்கள் எத்தனை
மீள வும்சி வால யங்கள் சூழ வந்த தெத்தனை (10)
முன்பு நான் பறித்துத் தூவிய பலவகையான மலர்கள்தாம் எத்தனை? வெறுமனே ஓதிக்கொண்டிருந்த மந்திரங்கள்தாம் எத்தனை? முரடனாய்த் திரிந்தபோது தீவினை தீரத் திருமுழுக்காடுதற்கு இறைத்த நீர்தாம் எத்தனை? மீண்டும் மீண்டும் சிவ ஆலயங்களைச் சுற்றிச் சுற்றிவருதல்தாம் எத்தனை?
அம்ப லத்தை அம்பு கொண்டு அசங்கென் றால சங்குமோ
கம்ப மற்ற பாற்க டல்க லங்கென் றால்க லங்குமோ
இன்ப மற்ற யோகி யைஇ ருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்ப லத்து ளேதெ ளிந்த தேசி வாயமே. (11)
பெரிய அரங்கத்தை ஒற்றை அம்பால் அசையச் செய்ய முடியுமா? அசைவில்லாத பாற்கடலை மத்து இல்லாமல் கடைய முடியுமா? உலக இன்பங்களிலே விருப்பமில்லாத ஓகியை அறியாமை வந்து அணுகுமா? இதுவே சிவந்த பொன் போன்ற அம்பலத்தில் சிவாயமயமாய் (சிவப் பேரொளியாய்) அமர்ந்திருந்து நான் அறிந்ததாகும்.
அவ்வெ னும்எ ழுத்தி னால்அ கண்ட மேழும் ஆகினாய்
உவ்வெ னும்எ ழுத்தி னால்உ ருத்த ரித்து நின்றனை
மவ்வெ னும்எ ழுத்தி னால்ம யங்கி னார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வு மாய்அ மர்ந்த தேசி வாயமே. (12)
அ என்ற எழுத்தினால் ஏழு உலகங்களாகவும் ஆனாய். உ என்ற எழுத்தினால் பல்வேறு வடிவங்கள் தாங்கினாய். ம என்ற எழுத்தினால் உலக மக்களை மயக்கினாய். (அ + உ + ம் = ஓம்) ஓம் என்ற பிரணவ மந்திரமாய் சிவாயநம (சிவ போற்றி) என்ற ஐந்தெழுத்து அமைந்துள்ளது.
மூன்று மண்ட லத்தி னும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயி லும்ந வின்றெ ழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்ப னும்எ டுத்து ரைத்த மந்திரம்
தோன்றும் ஒரே ழுத்து ளே சொல்ல எங்கும் இல்லையே. (13)
நம் உடம்பில் உள்ள நிலா, ஞாயிறு, நெருப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலும் மூலக்கனல் மேலெழும் முதுகுத் தண்டிலும் குண்டலினிப் பாம்பின் வாயிலும் ஓகியர்க்குத் தோன்றுகின்ற எழுத்தானது நம்மை எல்லாம் படைத்த தாய் தந்தை ஆகிய இறைவன் இறைவியால் சொல்லப்பட்ட மந்திரம் ஆகும். அது ஓ(ம்) என்ற எழுத்தினால் உண்டானது என்றாலும் மௌனமொழி ஆகையால் எங்கும் வாய்விட்டுச் சொல்லப்படுவது இல்லை.
நமசி வாய அஞ்செ ழுத்தும் நல்கு மேல்நி லைகளும்
நமசி வாய அஞ்சில் அஞ்சும் புராண மான மாயையும்
நமசி வாய அஞ்செ ழுத்தும் நம்மு ளேஇ ருக்கவே
நமசி வாய உண்மை யை நன்கு ரைசெய் நாதனே. (14)
நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை முறையாகச் சொல்லி வழிபடுவார்க்கு உயர்ந்த நிலைகள் அமையும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து நம் நெஞ்சில் இருப்பதனால் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தைக் கண்டவுடன் நெடுநாளாய் இருக்கும் மாயையும் அஞ்சி அகன்று போகும். எனவே இறைவனே! நமசிவாய என்னும் ஐந்தெழுத்தின் உண்மையை நீயே எனக்கு விளங்க உரைக்கவேண்டும்.
இல்லை இல்லை இல்லை என்று இயம்பு கின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற தொன்றை இல்லை என்ன லாகுமோ
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டபேர் இனிப்பி றப்ப தில்லையே. (15)
கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி வழக்காடும் எளியவர்களே! இல்லை என்று இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. அந்தக் கடவுளின் உண்மையை ஆராயப் போனால் இல்லாத பொருள் என்றும் இருந்தாலும் ஒன்று என்றும் இரண்டு தன்மையும் கலந்த பொருள் என்றும் வெளிப்படும். அத்தகைய கடவுளின் உண்மையை ஆராய்ந்து கண்டுகொண்ட அறிஞர்கள் பிறவாநிலை பெற்றுவிட்டனர். அவர்கள் இனிப் பிறக்கமாட்டார்கள்.
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம என்னும் நாமமே. (16)
கார கார என்கிற படைக்கல ஒலி எழுகின்ற போர்க் களத்தில் ஆயுதபாணியாக நின்ற புண்ணியனும் பல ஊழிகளாகக் காவல் செய்யும் காவலனும் ஏழு மரா மரங்களைத் தொளைத்து சுக்கிரீவனுக்காக வாலியைக் கொன்று அரசு தந்தவனுமான திருமாலின் சீராம இராம இராம என்னும் திருப்பெயரைச் சொல்லி என்றும் வழிபடுவோம்.
விண்ணி லுள்ள தேவர் கள் அறியொ ணாத மெய்ப்பொருள்
கண்ணி லாணி யாக வேக லந்து நின்ற தெம்பிரான்
மண்ணி லாம்பி றப்ப றுத்து மலர டிகள் வைத்தபின்
அண்ண லாரும் எம்மு ளேஅ மர்ந்து வாழ்வ துண்மையே. (17)
விண்ணிலுள்ள தேவர்களாலும் அறியமுடியாத மெய்ப்பொருளாகிய என் பெருமான் கண்ணில் கருமணிபோல என்னில் கலந்திருக்கிறார். அவரின் மலர் போன்ற திருவடிகளை என்மேல் வைத்து இந்த உலகத்தில் எடுக்கவிருக்கும் பிறப்பு அறுத்தார். அத்தகைய அண்ணலார் என் நெஞ்சத் தாமரையில் அமர்ந்து வாழ்வார் என்பது உண்மையாகும்.
அகார மான தம்ப லம்அ னாதி யான தம்பலம்
உகார மான தம்ப லம் உண்மை யான தம்பலம்
மகார மான தம்ப லம் வடிவ மான தம்பலம்
சிகார மான தம்ப லம்தெ ளிந்த தேசி வாயமே (18)
இறைவன் இருக்கும் அம்பலம் தொடக்கம் இல்லாத பழைமையானது. உண்மையானது. தனக்கெனத் தனி வடிவம் கொண்டது. அது அகர உகர மகர எழுத்துகளாலான ஓம் என்னும் பிரணவ மந்திரம் சேர்ந்தது. இதனைச் சிவாயநம என்ற ஐந்தெழுத்தாலும் உணர்ந்து தெளியலாம்.
உண்மை யான மந்தி ரம் ஒளியி லேஇ ருந்திடும்
தண்மை யான மந்தி ரம்ச மைந்து ரூபம் ஆகியே
வெண்மை யான மந்தி ரம்வி ளைந்து நீற தானதே
உண்மை யான மந்தி ரம்அ தொன்று மேசி வாயமே. (19)
உண்மையான மந்திரம் ஒளி வடிவில் இருக்கும். தண்மையான மந்திரம் வடிவம் பெற்று அமைந்திருக்கும். வெண்மையான மந்திரம் திருநீறாக விளைந்திருக்கும். ஆனாலும் உண்மையான மந்திரம் சிவாயநம என்று விளங்கித் தோன்றும்.
ஓம்ந மச்சி வாய மேஉ ணர்ந்து மெய்யு ணர்ந்தபின்
ஓம்ந மச்சி வாய மேஉ ணர்ந்துமெய்தெ ளிந்தபின்
ஓம்ந மச்சி வாய மேஉ ணர்ந்து மெய்யு ணர்ந்தபின்
ஓம்ந மச்சி வாய மே உட்க லந்து நிற்குமே. (20)
ஓம் நமசிவாய என்னும் பருவியல் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருள் உணர்ந்து உண்மை அறிந்தபின் சிவாயநம என்னும் நுண்ணியல் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை ஆசான் வழி தெளிவாக அறிந்துணர்ந்து சிவசிவ என்னும் காரண ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளையும் அவர் அறிவுறுத்த உண்மை உணர்ந்து வழிபட்டால் ஓம் நமசிவாயமே நம் உயிரில் கலந்து நின்று நலம் பயக்கும்.
இந்த இருபது பாடல்கள் கொண்ட இசைப் பாட்டுகள் வலையொளி இணையத் தளத்தில் நிறைய உள்ளன. கேட்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment