கடவுள் வாழ்த்து
குறள்: 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் எல்லாம் ஆகிய இறைவனை முதலாகக் கொண்டிருக்கிறது.
குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தூய அறிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாவிட்டால், ஒருவர் கற்ற கல்வியறிவினால் ஆகிய பயன்தான் என்ன?
குறள்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
அன்பர்களின் உள்ளமாகிய மலரில் சென்றிருக்கும் இறைவனின் உயர்ந்த திருவடிகளை எண்ணி எண்ணி அவரோடு சேர்ந்தவர்கள், இந்த உலகில புகழோடு நீண்ட காலம் நிலைத்து வாழ்வார்கள்.
குறள்: 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
எதுவுமே தேவைப்படாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை.
குறள்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மெய்ப்பொருளாகிய இறைவனோடு சேர்ந்து பிறர் புகழ நற்செயல்கள் செய்தவர்களிடம் அடுத்த பிறவி என்னும் இருளுக்கு ஏதுவான நல்வினை தீவினை ஆகிய இரண்டும் சேராது.
குறள்: 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறிகளின் வழியாகத் தோன்றும் ஆசைகளை அவித்த இறைவனுடைய தூய ஒழுக்க நெறியை உண்மையாகக் கடைப்பிடிப்பவர்கள், புகழோடு நீண்ட காலம் நிலைத்து வாழ்வார்கள்.
குறள்: 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு இணை இல்லாத இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து வாழ்பவர்களைத் தவிர மற்றவர்களால் மனக்கவலைகளையும் துன்பங்களையும் போக்கிக் கொள்ள முடியாது.
குறள்: 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாக விளங்கும இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து வாழ்பவர்களைத் தவிர மற்றவர்களால் பொருளும் இன்பமும் தேடுவதால் உண்டாகும் துன்பக் கடலைக் கடக்க முடியாது.
குறள்: 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
நாம் எண்ணி எண்ணிப் போற்றுகின்ற நற்பண்புகள் கொண்ட இறைவனின் திருவடிகளைப் பணியாத தலைகள், தத்தம் செயல்களைச் செய்யாத மெய், வாய், கண்,காது ,மூக்கு போல இருந்தும் பயன் இல்லாதவை.
குறள்: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கைக் கடலை நீந்திக் கடப்பார்கள். மற்றவர்களால் நீந்திக் கடக்க முடியாது.
No comments:
Post a Comment