நம்மையெல்லாம் பத்து மாதங்கள் கருப்பையில் சுமந்து பெருந்துயர்பட்டுப்
பெற்றெடுத்தவர் நம் தாய். நம் மீது வெயில் படாமலும் காற்று வீசாமலும் பனி
பெய்யாமலும் மார்பிலும் தோளிலும் வயிற்றிலும் அணைத்துக் காத்தவர்.
நமக்குப் பசிக்கும்போதெல்லாம் பாலும் சோறும் பார்த்துப் பார்த்து
ஊட்டியவர். நம்மையெல்லாம் நீராட்டி நெற்றிக்குப் பொட்டிட்டுக் கண்ணுக்கு
மையிட்டுக் கையிலும் காலிலும் கழுத்திலும் காதிலும் அணிகள் பூட்டி அழகு
பார்த்து கன்னம் கிள்ளி உச்சி மோந்து கண்ணொடு கண் வாயொடு வாய் முகத்தொடு
முகம்வைத்துக் கொஞ்சி முத்தாடி ஏணையிலும் தொட்டிலிலும் இட்டுத்
தாலாட்டியவர்; நம்மைச் சீராட்டியவர்.
நாள்தோறும் வாயிலும் கையிலும் கொடுத்து நம்மையெல்லாம் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்துவந்தவர். நம்மை நோய் அணுகாது மருந்தளித்துப்
பக்கலிருந்து கண்ணை இமை காப்பதுபோல் காத்துநின்றவர். நமக்கு வந்த நோயைத்
தமக்கு வந்ததாய் எண்ணித் துடித்துப்போனவர். இரவில் நாம் தூங்குவதற்காகத்
தாம் தூங்காமல் விழித்திருந்தவர்.
தம் பிள்ளை தவறு செய்தாலும் குற்றம் இழைத்தாலும் அதனைக் குறையாய்
எண்ணாமல் எவரிடமும் கூறாமல், 'தம் பிள்ளை இப்படிச் செய்துவிட்டதே' என்று
துயர்பட்டுத் துன்பப்பட்டு அதைத் தீர்க்க வழி தேடியவர். இத்தகைய கண்கண்ட
தெய்வமாகிய நம் அன்னைக்கு நன்றிக்கடனாக நாம் என்ன செய்யப்போகின்றோம்?
செய்கின்றோம்?
இளமைக்காலத்தில் நாம் ஆசைப்பட்டுக் கேட்டனவற்றை எல்லாம் அவர் பாசத்துடன்
வழங்கியதுபோல், முதுமைக்காலத்தில் அவர் ஆசைப்பட்ட பண்டங்களை எல்லாம்
நம்மைக் கேட்கும்முன்பே குறிப்பறிந்து அவருக்கு வழங்கியிருக்கிறோமா?
"தாயிடப் பிள்ளையிடத் தானே மனம்மகிழ" என்பது நம் ஊர்ச் சொலவடை அல்லவா!
நம்மேல் ஈ பறவாமல் அவர் நம்மைக் காத்ததுபோல் அவர்மேல் தூசு பறவாமல் நாம்
பாதுகாக்கிறோமா?
தம் பிள்ளை படிப்பதிலும் பண்புடன் நடந்துகொள்வதிலும் பொருள் ஈட்டுவதிலும்
பிறர் போற்ற வாழ்வதிலும் வல்லவன் என்று உலகு புகழ்வதைத்தானே ஒவ்வொரு
தாயும் விரும்புகிறார்! நம்மைப் பெற்றபொழுதினும் அவர் பெரிதும் மகிழ்வது
அப்பொழுதுதானே! அதையாகிலும் செய்கின்றோமா?
இவை எல்லாம் செய்தாலும் தாயின் அன்பிற்கு ஈடாகாதுதான்! ஆயினும் தாயிடம்
நாம் பட்ட கடன் தீர்க்க இவை உதவும். தாயின் கடன்தீர்த்தற்கு முற்றும்
துறந்த துறவிகளும் முன்நின்றனர் என்பதனைத் தமிழ் இலக்கியம்
எடுத்துக்காட்டுகிறது. புகார் நகரத்தில் செல்வ வளம்மிக்க வணிகக்
குடும்பத்தில் பிறந்தவர் பட்டினத்தடிகள். இளமையிலேயே இறையருளால்
துறவியாகிவிட்டார். திரைகடலோடிச் செல்வம் தேடவேண்டிய தம் மகன்
துறவியானதில் பட்டினத்தாரின் தாய்க்குத் தாங்கமுடியாத வருத்தம். மகனின்
போக்கை மாற்றமுடியாத அவர் தமக்குப் பட்டினத்தார்தாம் கொள்ளி
வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தாயின் விருப்பத்தைத்
தள்ளமுடியாமல் ஏற்றுக்கொண்ட பட்டினத்தார் தாயின் நினைவாக நாண் ஒன்றினை
இடுப்பில் அணிந்துகொண்டார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இறைவனை
வழிபட்டுவந்த பட்டினத்தார்க்குத் திருவிடைமருதூரில் இருக்கும்போது
இடுப்பிலிருந்த நாண் அவிழ்ந்தது. தாய்க்கு இறுதி நெருங்கியதை உணர்ந்த
அடிகள் உடனே புகார் திரும்பினார். மரணப் படுக்கையில் இருந்த தாய் மகனைக்
கண்டதும் உயிர்நீத்தார். வாழை மரங்களை வரிசையாய் அடுக்கி அதன்மேல் தம்
தாயை வைத்து இறுதிக் கரணங்களைச் செய்யத்தொடங்கினார். அவர்தம் உள்ளக்
குமுறல் பாக்களாக உருவெடுத்தன.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்று
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்தி பகலாய்எனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தமக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகி ழாமல் - உருசியுள்ள
தேனே அமிழ்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு
அள்ளிஇடுவது அரிசியோ அன்னை தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகம்மேல் முகம்வைத்து
முத்தாடி "என்றன்
மகனே" என அழைத்த வாய்க்கு
என்று அடிகள் உள்ளம் கரைந்து உருகினார்.
முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென்னி லங்கையில்
அன்னை இட்டதீ அடி வ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே
என்று சொல்லிக் கொள்ளி வைத்தவுடன் பச்சைமரம் பற்றி எரிந்தது!
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுமே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்து என்
ற(ன்)னையே ஈன்றெடுத்த தாய்
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.
என்று தம் கடன்முடித்துச் சென்றார் அடிகள்.ஊரும் நிலையல்ல உற்றார்
நிலையல்ல என்று பாடிய பட்டினத்தடிகள் தாயன்பை நினைந்து பாடிய இந்தப்
பாடல்கள் மக்களின் குரலாக என்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும்!
No comments:
Post a Comment