Wednesday, March 29, 2023

சிவவாக்கியர் பாடல்கள்

சிவவாக்கியர் பாடல்கள் 

சித்தர் பாடல்கள் சீர்திருத்தப் பெட்டகம்! பகுத்தறிவுப் பாசறை! உயிர் உய்க்கும் ஒளிநெறி! சித்தருள் சித்தர் சிவவாக்கியர்! ஊன் உடம்பு ஆலயத்தை உள்ளவாறு உணர்ந்து உலகு உய்ய உணர்த்தும் உரவோர்! அவரின் இசை வடிவில் வெளிவந்த இருபது பாடல்களின் உரை விளக்கம் இது! 

ஓடி ஓடி ஓடி ஓடி உட்க லந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்க ளும்க ழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணி றந்த கோடியே. (1) 

நம் உள்ளத்திலே உறைந்திருக்கும் இறைவனை உணராமல் அவரை வெளியிலே தேடிக் கொண்டு இங்கு இருப்பாரா, அங்கு இருப்பாரா என்று ஓடி ஓடி அலைந்தும் அவர் எங்கிருப்பார் என்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்தும் நாள்கள் கழிந்து போக, இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று மனம் வாடி வாடி இறந்து போன மக்கள் இந்த உலகத்தில் எண்ணில்லாத பேர்கள்; கோடானு கோடி மக்கள். 

என்னி லேஇ ருந்த வொன்றை யான்அ றிந்த தில்லையே
என்னி லேஇ ருந்த வொன்றை யான்அ றிந்து கொண்டபின்
என்னி லேஇ ருந்த வொன்றை யாவர் காண வல்லரே
என்னி லேஇ ருந்தி ருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே, (2) 

என் உள்ளத்திலே இருக்கின்ற இறைவனை இதுவரை நான் அறியாமல் இருந்து விட்டேன். என் உள்ளத்திலே இருக்கின்ற இறைவனை நான் உணர்ந்து அறிந்து கொண்டபிறகு என் உள்ளத்திலே இருக்கின்ற இறைவனைப் பற்றியும் என்னைப் பற்றியும் எண்ணி எண்ணி முழுமையாக அறிந்து கொண்டேன். என்போல தன்னுள் தங்கியிருக்கும் இறைவனை உணரும் வலிமை உடையவர் யார்? 

நான தேது நீய தேது நடுவில் நின்ற தேதடா
கோன தேது குருவ தேது கூறி டும்கு லாமரே
ஆன தேது அழிவ தேது அப்பு றத்தில் அப்புறம்
ஈன தேது ராம ராம ராம என்னும் நாமமே. (3) 

நான் என்பது ஏது? நீ என்பது ஏது? நம் உள்ளத்தில் நடுவில் இருக்கும் இறையால் அல்லவா? இதை உணராமல் கோன் உயர்ந்தது, குரு உயர்ந்தது என்று கூறும் இழிந்தோரே! இந்த உலகம் ஆனது எதனால்? அழிவது எதனால்? அப்பாலுக்கு அப்பால் இருந்து காக்கப்படுவது எதனால்? இராம இராம இராம என்னும் திருப்பெயரால் அல்லவா? 

அஞ்செ ழுத்தி லேபி றந்து அஞ்செ ழுத்தி லேவளர்ந்(து)
அஞ்செ ழுத்தை ஓது கின்ற பஞ்ச பூத பாவிகாள்
அஞ்செ ழுத்தில் ஓர்எ ழுத்(து)அ றிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்ப லத்தில் ஆடுமே. (4) 

நாங்கள் ஐந்தெழுத்தில் பிறந்தவர்கள், ஐந்தெழுத்தில் வளர்ந்தவர்கள் என்றெல்லாம் சொல்லி நாளும் ஐந்தெழுத்தை ஓதுகின்ற ஐம்புலன்களின் கட்டுப்பாடு இல்லாத பாவிகளே! இறைவனை வழிபடும் ஐந்தெழுத்தில் முதல் எழுத்தாகிய சி என்பதன் பொருளை மட்டும் உணர்ந்து கூறும் வல்லமை பெற்றால் அஞ்சாதீர்கள், அஞ்சாதீர்கள் என்று ஆண்டவன் நம் நெஞ்ச அரங்கத்தில் ஆட மாட்டானா? 

இடத்த துன்கண் சந்தி ரன்வ லத்த துன்கண் சூரியன்
இடக்கை சங்கு சக்க ரம்வ லக்கை சூலம் மான்மழு
எடுத்த பாதம் நீள்மு டி எண்தி சைக்கும் அப்புறம்
உடல்க லந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரே? (5) 

சந்திரனை இடக் கண்ணாகவும் சூரியனை வலக் கண்ணாகவும் கொண்டு இடக் கையில் சங்கு சக்கரத்தையும் வலக் கையில் சூலம், மான், மழுவையும் ஏந்தித் தூக்கிய பாதமும் நீண்ட சடை முடியுமாக எட்டுத் திசைகளுக்கும் அப்பாற்பட்ட அந்தப் பரம்பொருள் எல்லா உயிர்களின் உடலிலும் கலந்திருக்கும் மாயத்தைக் கண்டுணரக்கூடிய வலிமை பெற்றவர்கள் யார்? 

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்ற தல்ல அற்றதல்ல
பெரிய தல்ல சிறிய தல்ல பேசும் ஆவி தானுமல்ல
அரிய தாகி நின்ற தன்மை யாவர் காண வல்லரே. (6) 

இறைவன், வடிவத்தோடும் வடிவம் இல்லாதும், ஒன்றை விரும்பிப் பற்றுக் கொண்டும் பற்றில்லாமலும், நெருக்கமாகவும் தொலைவாகவும், வேறானதாகவும் ஒன்றாகவும், பெரியதாகவும் சிறியதாகவும், பேசுகின்ற உயிராகவும் இல்லாதவன். இப்படி எளிதில் உணர்ந்து அறிய முடியாத இயல்பு படைத்த இறைவனைக் கண்டறியும் வல்லமை பெற்றவர்கள் யார்? 

மண்க லம்க விழ்ந்த போது வைத்து வைத்த டுக்குவார்
வெண்க லம்க விழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நம்க லம்க விழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்க லந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே. (7) 

மண்பானை உடைந்துவிட்டால் வேறு எதற்காவது பயன்படும் என்று எடுத்து வைப்பார்கள். வெண்கலப் பானை உடைந்துவிட்டால் கடையில் மாற்றிக் கொள்ளலாம் என்று பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள் ஆனால் நம் உயிர் போய்விட்டால் இந்த உடல் நாற்றம் அடிக்கும் என்று இடுகாட்டில் சென்று போட்டுவிடுவார்கள். மண்பானை, வெண்கலப்பானை, உயிர்ப் பானையாகிய உடல் ஆகிய மூன்றைப் பற்றிய மக்களுடைய எண்ணங்கள்தான் எவ்வளவு மாறுபட்டிருக்கிறது பாருங்கள்! இது என்ன மாயம்! மண்பானைக்கு இருக்கும் மதிப்பு, வெண்கலப் பானைக்கு இருக்கும் மதிப்புகூட மனித உடலுக்கு இல்லையே! 

ஆன அஞ்செ முத்து ளே அண்ட மும் அ கண்டமும்
ஆன அஞ்செ ழுத்து ளே ஆதி யான மூவரும்
ஆன அஞ்செ ழுத்து ளே அகார மும்ம காரமும்
ஆன அஞ்செ ழுத்து ளேஅ டங்க லாவ லுற்றவே. (8) 

ஐந்தெழுத்தில்தான் பல்வேறு உலகங்களும் ஒன்றான முழுமையும் உள்ளன. ஐந்தெழுத்தில்தான் மூன்று தெய்வங்களும் உள்ளன. ஐந்தெழுத்தில்தான் யகர மகர உயிர் நாடிகளான இடகலை பிங்கலை நாடிகள் உள்ளன. ஐந்தெழுத்தில்தான் ஆசைப்படுதலும் அடங்குதலும் உள்ளன. 

நினைப்ப தொன்று கண்டி லேன் நீய லாது வேறிலை
நினைப்பு மாய்ம றப்பு மாய் நின்ற மாயை மாயையோ
அனைத்து மாய்அ கண்ட மாய்அ னாதி முன்அ னாதியாய்
எனக்குள் நீஉ னக்குள் நான்இ ருக்கு மாற தெங்ஙனே. (9) 

நான் எப்போதும் நினைக்கின்ற ஒன்றைக் கண்டதில்லை. அது உன்னைத் தவிர வேறு இல்லை. உன்னை நினைப்பதும் மறப்பதுமாய் இருக்கின்ற மாயம் என்ன மாயமோ? உலகிலுள்ள அனைத்துமாய் முழுமையாய் தொடக்கமே இல்லாதவனாய் எனக்குள்ளே கலந்தவனாய் இருக்கின்ற உன்னை, உனக்குள் அடங்கி அடிமைப்பட்ட நான் எப்படி நினைத்து வழிபடுவேன்? 

பண்டு நான்ப றித்தெ றிந்த பன்ம லர்கள் எத்தனை
பாழி லேசெ பித்து விட்ட மந்தி ரங்கள் எத்தனை
மிண்ட னாய்த்தி ரிந்த போது இறைத்த நீர்கள் எத்தனை
மீள வும்சி வால யங்கள் சூழ வந்த தெத்தனை (10) 

முன்பு நான் பறித்துத் தூவிய பலவகையான மலர்கள்தாம் எத்தனை? வெறுமனே ஓதிக்கொண்டிருந்த மந்திரங்கள்தாம் எத்தனை? முரடனாய்த் திரிந்தபோது தீவினை தீரத் திருமுழுக்காடுதற்கு இறைத்த நீர்தாம் எத்தனை? மீண்டும் மீண்டும் சிவ ஆலயங்களைச் சுற்றிச் சுற்றிவருதல்தாம் எத்தனை? 

அம்ப லத்தை அம்பு கொண்டு அசங்கென் றால சங்குமோ
கம்ப மற்ற பாற்க டல்க லங்கென் றால்க லங்குமோ
இன்ப மற்ற யோகி யைஇ ருளும் வந்து அணுகுமோ
செம்பொன் அம்ப லத்து ளேதெ ளிந்த தேசி வாயமே. (11) 

பெரிய அரங்கத்தை ஒற்றை அம்பால் அசையச் செய்ய முடியுமா? அசைவில்லாத பாற்கடலை மத்து இல்லாமல் கடைய முடியுமா? உலக இன்பங்களிலே விருப்பமில்லாத ஓகியை அறியாமை வந்து அணுகுமா? இதுவே சிவந்த பொன் போன்ற அம்பலத்தில் சிவாயமயமாய் (சிவப் பேரொளியாய்) அமர்ந்திருந்து நான் அறிந்ததாகும். 

அவ்வெ னும்எ ழுத்தி னால்அ கண்ட மேழும் ஆகினாய்
உவ்வெ னும்எ ழுத்தி னால்உ ருத்த ரித்து நின்றனை
மவ்வெ னும்எ ழுத்தி னால்ம யங்கி னார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வு மாய்அ மர்ந்த தேசி வாயமே. (12) 

அ என்ற எழுத்தினால் ஏழு உலகங்களாகவும் ஆனாய். உ என்ற எழுத்தினால் பல்வேறு வடிவங்கள் தாங்கினாய். ம என்ற எழுத்தினால் உலக மக்களை மயக்கினாய். (அ + உ + ம் = ஓம்) ஓம் என்ற பிரணவ மந்திரமாய் சிவாயநம (சிவ போற்றி) என்ற ஐந்தெழுத்து அமைந்துள்ளது. 

மூன்று மண்ட லத்தி னும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயி லும்ந வின்றெ ழுந்த அட்சரம்
ஈன்ற தாயும் அப்ப னும்எ டுத்து ரைத்த மந்திரம்
தோன்றும் ஒரே ழுத்து ளே சொல்ல எங்கும் இல்லையே. (13) 

நம் உடம்பில் உள்ள நிலா, ஞாயிறு, நெருப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலும் மூலக்கனல் மேலெழும் முதுகுத் தண்டிலும் குண்டலினிப் பாம்பின் வாயிலும் ஓகியர்க்குத் தோன்றுகின்ற எழுத்தானது நம்மை எல்லாம் படைத்த தாய் தந்தை ஆகிய இறைவன் இறைவியால் சொல்லப்பட்ட மந்திரம் ஆகும். அது ஓ(ம்) என்ற எழுத்தினால் உண்டானது என்றாலும் மௌனமொழி ஆகையால் எங்கும் வாய்விட்டுச் சொல்லப்படுவது இல்லை. 

நமசி வாய அஞ்செ ழுத்தும் நல்கு மேல்நி லைகளும்
நமசி வாய அஞ்சில் அஞ்சும் புராண மான மாயையும்
நமசி வாய அஞ்செ ழுத்தும் நம்மு ளேஇ ருக்கவே
நமசி வாய உண்மை யை நன்கு ரைசெய் நாதனே. (14) 

நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை முறையாகச் சொல்லி வழிபடுவார்க்கு உயர்ந்த நிலைகள் அமையும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து நம் நெஞ்சில் இருப்பதனால் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தைக் கண்டவுடன் நெடுநாளாய் இருக்கும் மாயையும் அஞ்சி அகன்று போகும். எனவே இறைவனே! நமசிவாய என்னும் ஐந்தெழுத்தின் உண்மையை நீயே எனக்கு விளங்க உரைக்கவேண்டும். 

இல்லை இல்லை இல்லை என்று இயம்பு கின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற தொன்றை இல்லை என்ன லாகுமோ
இல்லை அல்ல ஒன்றும் அல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டபேர் இனிப்பி றப்ப தில்லையே. (15) 

கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி வழக்காடும் எளியவர்களே! இல்லை என்று இருக்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. அந்தக் கடவுளின் உண்மையை ஆராயப் போனால் இல்லாத பொருள் என்றும் இருந்தாலும் ஒன்று என்றும் இரண்டு தன்மையும் கலந்த பொருள் என்றும் வெளிப்படும். அத்தகைய கடவுளின் உண்மையை ஆராய்ந்து கண்டுகொண்ட அறிஞர்கள் பிறவாநிலை பெற்றுவிட்டனர். அவர்கள் இனிப் பிறக்கமாட்டார்கள். 

கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம என்னும் நாமமே. (16) 

கார கார என்கிற படைக்கல ஒலி எழுகின்ற போர்க் களத்தில் ஆயுதபாணியாக நின்ற புண்ணியனும் பல ஊழிகளாகக் காவல் செய்யும் காவலனும் ஏழு மரா மரங்களைத் தொளைத்து சுக்கிரீவனுக்காக வாலியைக் கொன்று அரசு தந்தவனுமான திருமாலின் சீராம இராம இராம என்னும் திருப்பெயரைச் சொல்லி என்றும் வழிபடுவோம். 

விண்ணி லுள்ள தேவர் கள் அறியொ ணாத மெய்ப்பொருள்
கண்ணி லாணி யாக வேக லந்து நின்ற தெம்பிரான்
மண்ணி லாம்பி றப்ப றுத்து மலர டிகள் வைத்தபின்
அண்ண லாரும் எம்மு ளேஅ மர்ந்து வாழ்வ துண்மையே. (17) 

விண்ணிலுள்ள தேவர்களாலும் அறியமுடியாத மெய்ப்பொருளாகிய என் பெருமான் கண்ணில் கருமணிபோல என்னில் கலந்திருக்கிறார். அவரின் மலர் போன்ற திருவடிகளை என்மேல் வைத்து இந்த உலகத்தில் எடுக்கவிருக்கும் பிறப்பு அறுத்தார். அத்தகைய அண்ணலார் என் நெஞ்சத் தாமரையில் அமர்ந்து வாழ்வார் என்பது உண்மையாகும். 

அகார மான தம்ப லம்அ னாதி யான தம்பலம்
உகார மான தம்ப லம் உண்மை யான தம்பலம்
மகார மான தம்ப லம் வடிவ மான தம்பலம்
சிகார மான தம்ப லம்தெ ளிந்த தேசி வாயமே (18) 

இறைவன் இருக்கும் அம்பலம் தொடக்கம் இல்லாத பழைமையானது. உண்மையானது. தனக்கெனத் தனி வடிவம் கொண்டது. அது அகர உகர மகர எழுத்துகளாலான ஓம் என்னும் பிரணவ மந்திரம் சேர்ந்தது. இதனைச் சிவாயநம என்ற ஐந்தெழுத்தாலும் உணர்ந்து தெளியலாம். 

உண்மை யான மந்தி ரம் ஒளியி லேஇ ருந்திடும்
தண்மை யான மந்தி ரம்ச மைந்து ரூபம் ஆகியே
வெண்மை யான மந்தி ரம்வி ளைந்து நீற தானதே
உண்மை யான மந்தி ரம்அ தொன்று மேசி வாயமே. (19) 

உண்மையான மந்திரம் ஒளி வடிவில் இருக்கும். தண்மையான மந்திரம் வடிவம் பெற்று அமைந்திருக்கும். வெண்மையான மந்திரம் திருநீறாக விளைந்திருக்கும். ஆனாலும் உண்மையான மந்திரம் சிவாயநம என்று விளங்கித் தோன்றும். 

ஓம்ந மச்சி வாய மேஉ ணர்ந்து மெய்யு ணர்ந்தபின்
ஓம்ந மச்சி வாய மேஉ ணர்ந்துமெய்தெ ளிந்தபின்
ஓம்ந மச்சி வாய மேஉ ணர்ந்து மெய்யு ணர்ந்தபின்
ஓம்ந மச்சி வாய மே உட்க லந்து நிற்குமே. (20) 

ஓம் நமசிவாய என்னும் பருவியல் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருள் உணர்ந்து உண்மை அறிந்தபின் சிவாயநம என்னும் நுண்ணியல் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை ஆசான் வழி தெளிவாக அறிந்துணர்ந்து சிவசிவ என்னும் காரண ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளையும் அவர் அறிவுறுத்த உண்மை உணர்ந்து வழிபட்டால் ஓம் நமசிவாயமே நம் உயிரில் கலந்து நின்று நலம் பயக்கும். 

இந்த இருபது பாடல்கள் கொண்ட இசைப் பாட்டுகள் வலையொளி இணையத் தளத்தில் நிறைய உள்ளன. கேட்டு மகிழுங்கள். 

Friday, March 11, 2022

சிவபுராணம் உரை

சிவபுராணம்

 

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

நமச்சிவாய என்று சொல்லப்படும் "சிவ போற்றி"  என்னும் திருவைந்தெழுத்து வாழ்க! அந்தத் திரு ஐந்தெழுத்து மந்திர ஒலியாக இருப்பவனின் திருப்பாதங்கள் என்றும் நிறைபெறுக! கண்ணிமைக்கும் நேரம் கூட என் நெஞ்சிலிருந்து நீங்காதவனின் திருப்பாதங்கள் வாழ்க! திருப்பெருந்துறையில் உள்ள கோகழிக் கோவிலுள் ஆசிரிய வடிவாய் வந்து என்னை ஆட்கொண்டவனின் திருப்பாதங்கள் வாழ்க! எவராலும் எளிதில் நெருங்கி உணரமுடியாத அறிவின் நுண்பொருளாகி நின்று அன்புடையோர் எவரிடத்தும் நெருங்கி வருபவனின் திருப்பாதங்கள் என்றும்  நிலைபெறுக!

[ "சிவ போற்றி" (சிவனே! வணக்கம்) என்பதே தமிழர் கொண்டதும் உண்மையானதுமான  திருவைந்தெழுத்து ஆகும். "தென்னாடு உடைய சிவனே போற்றி"  என்ற போற்றி திரு அகவல் அடிகளை நோக்கி உணர்ந்து கொள்க. ஆரியர் "சிவ போற்றி" என்னும் திருவைந்தெழுத்தை சமற்கிருதத்தில் 'சிவாய நம' என்று மொழிபெயர்த்துள்ளனர் சிவ என்னும் பெயர் 'ய' என்னும் வேற்றுமை உருபு ஏற்று 'சிவாய' என்று ஆகும். அதனோடு சேரும் நமஸ் (வணக்கம்) என்னும் வடசொல் 'நம:' என்று திரியும். ஆகவே 'சிவாய நம:' என்னும் சொல் உண்மையில் ஆறெழுத்து அன்றி ஐந்தெழுத்து ஆகாது. 'சிவாயநம' என்பது 'நமச்சிவாய' என்று தமிழில் முறை மாறி நிற்கும்போதும் ஆறு எழுத்து ஆவதனை அறிக.

நாதம் = ஒலி. நாதன் = ஒலிவடிவம் ஆனவன்.

ஆகமம் = தோன்றியம்,  அறிவின் நுண்பொருள். ]

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

ஒன்றாகவும் பலவாகவும் அமைந்து எங்கும் தங்கி இருப்பவனின்  திருப்பாதங்கள் என்றும் நிலைபெறுக!  அங்குமிங்கும் அலையும் மனத்தின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து என்னை ஆண்டவனின் திருப்பாதங்கள் எங்கும் வெற்றி பெறுக.

( எங்கும் தங்கி இருப்பவன் இறைவன்.  எல்லா உலகங்களையும் ஆள்வதால் ஆண்டவன் என்றும் எல்லாவற்றையும் கடந்து நிற்பதால் கடவுள் என்றும் எல்லா உயிர்கட்கும் உணவைப் பகுத்து அளிப்பதால் பகவன் என்றும்  பெயர் பெறுகிறான். )

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

தொடர்ந்து வரும் பிறப்புத் தொடரி(சங்கிலி)யை அறுக்கும் பிளவுபடுத்துவோனின் அருள் மழை பெய்கின்ற கழல்கள் வெல்லட்டும்! தன்னை வணங்காத அயலார்க்கு மிகத் தொலைவில் இருப்பவனின் அழகிய கழல்கள் எங்கும் வெல்லட்டும்! கைகுவித்து வணங்கி வாழ்த்துபவர்களின் உள்ளத்தில் மகிழ்ந்தாடும் அரசனின் கழல்கள் வெல்லட்டும்! தலை தாழ்த்தி வணங்குபவர்தம் நிலை உயர்த்திச் சீர்செய்பவனின் கழல்கள் என்றும் வெற்றி பெறட்டும்!

[ 'பிஞ்ஞகன்' என்ற சொல் பின்னல் உடையவன் என்றும் பிளவுபடுத்துவோன் என்றும் இரு பொருள்படும். பின் -> பின்னு -> பின்னல் -> பின்னகன் -> பிஞ்ஞகன் என்றாகிப் பின்னலை உடையவன் என்ற பொருள் தரும். பிள் -> பிளவு. பிள் -> பின் -> பின்னம் -> பின்னகன் -> பிஞ்ஞகன் என்றாகிப் பிளவுபடுத்துவோன் என்ற பொருள் தரும். இங்குப் பிறப்பு அறுத்தல் பிளவுபடுத்துவோனின் தொழில்தானே! ]

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

எல்லாம் உடையானின் திருவடிகளுக்கு வணக்கம். என் தந்தையின் திருவடிகளுக்கு வணக்கம். நெருப்பென ஒளிர்பவனின்  திருவடிகளுக்கு வணக்கம்.  சிவபெருமானின் சிவந்த பாதங்களுக்கு என் வணக்கம். அன்பே வடிவாக இருக்கும் மாசற்றோனின் திருவடிகளுக்கு வணக்கம்.  நிலையில்லாத மாய வாழ்க்கையைப் போக்குகின்ற மன்னனின்  திருவடிகளுக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையில் உள்ள நம் தெய்வத்தின் திருவடிகளுக்கு வணக்கம்.

['உடையான்' என்ற சொல் எல்லாம் உடையவன் என்ற பொருள்பட்டு இறைவனைக் குறிக்கும். இதனை ஈஸ்வரன் என்று மொழிபெயர்ப்பார்கள் வடமொழியாளர். தஞ்சைப் பெருவுடையார் கோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் எனப்படுதல் காண்க. ஈஸ்வரன் -> ஈசன் -> ஈஷ். ராம: + ஈஷ் = ரமேஷ். காமம், வெகுளி, மயக்கம் என்பன  மும்மலங்கள்.  மலங்களை நீக்கியவன் நிமலன்.  மன்னுதல் = நிலைபெறுதல். மன்னன் = நிலைபெற்றவன்.]

ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20

குறையாத இன்பத்தைக் கொடுக்கும் அள்ள அள்ளக் குறையாத மலை போன்றவனுக்கு வணக்கம். அத்தகைய சிவன் என் உள்ளத்தின் உள்நின்றான். அதனாலே  அவன் தந்த திருவருளாலே நான் முன்பு செய்த  வினைகளின் பயன் ஒழிய,  சிவ புராணம் என்னும் சிவபெருமானின் தொன்மை வரலாற்றைச் சொல்லத்  தொடங்குகிறேன். 

[ மலை என்பதனைச் சிலர் வெள்ளிமலை (கைலாயம்) என்றும் அண்ணாமலை என்றும் உரைப்பர்.  புராணம் =  தொன்மையான வரலாறு. ]

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான் தம் கருணைக்  கண்களைக் காட்டுவதற்காக என்னிடம்  வந்தடைந்தார். அவருடைய நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழகான கழல் அணிந்த திருவடிகளை வணங்கி, "விண் நிறைந்தவனே! மண் நிறைந்தவனே! அவற்றிலும் மிகுந்து மேம்பட்டவனே!  விளங்குகின்ற பேரொளியாய் இருப்பவனே! உன்னுடைய அளவு இது என்று கூற முடியாத அளவில்லாதவனே! இதுதான் உன் இடம் என்று சொல்ல முடியாத எல்லை இல்லாதவனே!" என்றெல்லாம் உன் பெரும்புகழைத் தீயவினையுடைய   நான் புகழ்ந்துரைத்துப் போற்றும் வழிகளுள் ஒன்றையும் அறியாது இருக்கின்றேன்.

[ எண் = அளவு ஆறு = வழி. ]

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உள்ளீடு இல்லாத புல்லாகித் திரண்டு பூண்டாகி அகம் வைரம் போல் இறுகிய மரமாகி அதனைத் துளைக்கும் புழுவாகி ஊர்ந்து செல்லும் பாம்பாகிப்  பறக்கும் பறவையாகி பலவகைப்பட்ட விலங்குகளாகிக் கல் போன்ற மனம் படைத்த மனிதன் ஆகி அலையும் பேயாகி ஏவல் செய்யும் பூதக் கணங்களாகி வலிய மனம் படைத்த அசுரராகி அனைத்தையும் துறந்த முனிவராகி உயர்ந்த தேவராகி என  நிலையான நிலைத்திணையாகவும் இயங்குதிணையாகவும் உள்ள எல்லாப் பிறப்பும் பிறந்து மனம் சலித்துப் போனேன். எம்பெருமானே! உன் பொற்பாதங்களை மெய்யாகக் கண்டு இன்றுதான் நான் வீடுபேறு பெற்றேன்.

[ மனத்தின் தன்மைகளை பிறப்புகளின் மேல் ஏற்றிக் கூறுகிறார் எனவும் கருதலாம். உள்ளீடு அற்ற மனம் அன்பு நீர் பாயத் திரண்டு அடி பருத்து மரம் போல் இறுகும் சமையத்துப் புலனாகிய புழுக்களால்  பறவைபோலப் பறந்தும், பாம்புபோலத்  திரிந்தும் கல் போல இறுகி இறைவனை எண்ணாமல் இருந்தும்,  பேயாய் அலைந்தும், இறைவனை நெருங்கியபின்பும் வன்மை பெற்றும் முற்றும் துறந்து நானே தெய்வம் என இறுமாப்புக் கொண்டும் என்றவாறு பல தொல்லைகளைத் தரக்கூடியது;  இறைவனின் திருப்பாதங்களை நேரில் கண்டபின் தானே அது அமைதி அடைந்தது என்று கூறுவதாகவும் கொள்ளலாம். கல்  என்று ஒரு பிறவி இல்லாமையால் கல் ஆய் (ஆகிய -> ஆய -> ஆய்) மனிதராகி எனப் பாடம் கொள்ளப் பெற்றது. ]

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

 நான் உய்வு பெறுவதற்காக என் உள்ளத்திற்குள் ஓம் என்னும் ஓங்கார வடிவம் கொண்டு நின்றவனே! மாசு  இல்லாதவனே!  காளையின்மீது ஊர்ந்து வருபவனே! நான்கு மறைகளும் 'தலைவ' என உன்னைத் தொழ உயர்ந்து ஆழ்ந்து அகன்ற நுட்பமானவனே!  வெப்பமானவனே! குளிர்ச்சியானவனே! என்னை இயக்கும் தலைவனாம் மாசற்றவனே!  பொய்யாய் இவ்வுலகில் இருப்பவை எல்லாம் என்னை விட்டுப் போவதற்காக  திருப்பெருந்துறைக்கு வந்து அருள் செய்து மெய்யறிவாய்  ஒளிபெறத் தோன்றும் மெய்ச்சுடரே!  எவ்வகை அறிவும் இல்லாத எனக்கு இன்பம் தரும் பெருமானே!  அறியாமையை உள்ளத்தில் இருந்து அகற்றிடும் தூய நல்லறிவே!  [ இருவேறு உலகத்து இயற்கையை உயர்வு ஆழம் என்றவாறும் அகலம் நுண்மை என்றவாறும் கூறுதல்  காண்க. ]

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

பிறப்பு இல்லாதவனே! வாழ்நாள் என்ற அளவு இல்லாதவனே! இறுதி இல்லாதவனே! எல்லா உலகங்களையும் உண்டாக்குபவனே! அவற்றைக் காப்பவனே! ஒரு கால எல்லையுள் அவற்றை எல்லாம் அழிப்பவனே! எனக்கு அருள் தருபவனே! என் மாசுகளைப்  போக்குபவனே! உன் அடியானாய்ப்  பணி செய்ய என்னைத் தூண்டுபவனே! பூவில் மணம்போல்  பொலிபவனே! மிகத் தொலைவினில்  இருப்போனே!  மிகமிக அருகினில் இருப்போனே!

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

 

சொல்லும் மனமும் உலக நினைப்பை விட்டு நீங்க, திருப்பெருந்துறையில் மறையோன் வடிவாக நின்றவனே!   அப்போதுதான் கறந்த ஆவின் பாலில் கரும்புச் சாற்றையும் நெய்யையும் கலந்தால் எப்படிச் சுவைக்குமோ அப்படிச் சுவையில் சிறந்து, உன்னை வணங்கும் அடியார்களின் உள்ளத்தில் நினைக்கும் போதெல்லாம் தேன் போல இனித்து,  எடுத்த பிறவியை  அறுத்தொழிக்கும் எங்கள் பெருமானே!

[ மறையோன் என்பதற்கு மறைந்து நிற்பவன் என்றும் பொருள் உரைப்பர்.  எண்ணிடத் தேன் போல இனிப்பதுதானே தேன் ஊறி நிற்றல்! ]

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் ஐந்து நிறங்களை உடையவனே! விண்ணோர்கள் புகழ்ந்து வணங்கும் போதும் நீ மறைந்திருந்தாய்! ஆனால், எம்பெருமானே, எளிதிலே  நீக்கமுடியாத வல்வினை உடைய என்னை நான் மறைந்துபோகுமாறு  மூடிக்கிடந்த அறியாமையாகிய மாய  இருளை நல்வினை தீவினை என்ற  அறுப்பதற்கு அரிய கயிற்றினால் கட்டுவித்து, வெளியே தோலைப் போர்த்தியதும் எங்கும் புழுத்த அழுக்கு மூடி வெளித்தள்ளும் ஒன்பது வாசல் உடையதுமான ஆகிய கூடாகிய உடலைக் கலங்கச் செய்யும் ஐம்புலன்களும் எப்போதும் என்னை வஞ்சிப்பதால் மனம் மாறுபட்டு,  மாசில்லாதவனே, உன்பால் கலந்த அன்பு கொண்டு கசிந்து உள்ளம் உருகும் நலம் கொஞ்சம்கூட இல்லாத சிறியவன் ஆகிய எனக்கு அருள் செய்தாய்! நாயினும் கேடுகெட்ட அடியேனுக்காக நிலத்தின்மேல் ஆசிரியனாக எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டிய தாயினும் மேம்பட்ட அருள் வடிவான மெய்ப்பொருளே!  

[ ஐம்பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உள்ளன. நிலம் பொன் நிறமும், நீர் வெண்ணிறமும், காற்று கருநிறமும், நெருப்பு செந்நிறமும், விசும்பு புகை நிறமும் பெற்றிருக்கும். ஒன்பது வாயிலாவன – செவி இரண்டு, கண் இரண்டு, மூக்குத்துளை இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. இறைவன்   விண்ணோர்க்கு  மறைந்திருந்தான், அடியேனுக்கு  நிலத்தின் மேல் வந்து அருள் செய்தான் என்றல் காண்க. ]

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே! தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

குற்றமற்ற விளக்குகளான  அன்பர்களுக்குள் மலர்ந்து அவர்தம்  நெஞ்சத் தாமரையின் சுடராய்  ஒளிர்பவனே! ஒளி வடிவினனே! தேன் நிறைந்த அமுதே! சிவபுரம் என்னும் வெள்ளிமலையானே! ஆசை என்னும்  கட்டறுத்துத் தாங்குகின்ற மேலோனே! என் நெஞ்சத்தில் வஞ்ச எண்ணங்கள் நீங்க அன்போடு அருள்புரிந்து என்னைவிட்டு நீங்காது நிற்கும் அருள்வடிவான பேராறே! உண்ண உண்ணத் தெவிட்டாத இன்னமுதே!   அளவிடமுடியாத பெருமானே! உன்னை உணராதவர் உள்ளங்களில் இருந்தும் அவர்களுக்குப் புலனாகாத ஒளியோனே! என் கல் போன்ற மனத்தை நீர்போல் உருகும்படி செய்து,  உன் பிரிவைத் தாங்க முடியாத அளவிற்கு உயிர்க்கு உயிராய் நின்றவனே!

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே

இன்பமும் துன்பமும் இல்லாதவனே! அன்பருக்காக அவையிரண்டையும் உடையவனே! அன்பு செய்பவருக்கு அன்பனே!  எல்லாவற்றிலும் இருப்பவனே! எதிலும் இல்லாதவனே! தூய ஒளியே!  அடர்ந்த காரிருளே! பிறவாத பெருமை பெற்றவனே! முதல்வனே! இறுதியாகவும் நடுவாகவும் இருந்து இல்லாதவனே! வேறு வினைகளில் மூழ்கிக் கிடந்த என்னைக் காந்தம் போல் ஈர்த்து ஆட்கொண்ட என் தந்தையே! பெருமானே! நுண்ணிய மெய்யறிவின் துணைகொண்டு உணரும் அறிஞர்தம் கருத்துகளின் நுண்மாண் நுழைபுலமே! நுட்பம் செறிந்த நுண்ணுணர்வே! போதலும் வருதலும் பொருந்துதலும் இல்லாத நல்வினையாளனே! எம்மைக்  காக்கின்ற காவலனே! காண்பதற்கு அரிய பேரொளியே! தொடர்ந்து பாயும் ஆற்றுநீர் போன்ற இன்ப வெள்ளமே! தலைவா! எல்லாவற்றிலும் எல்லாரினும் மேம்பட்டு நிற்பவனே! நிலையாக ஒளிவீசும் இருசுடர்களின் ஒளியாய் நின்று, சொல்லால் உணர்த்தமுடியாத நுண் உணர்வுகளாய்,மாற்றம் நிலைபெற்ற உலகத்தில் வெவ்வேறாக வந்த  அறிவின் தெளிவே! தெளிவிற்கும் தெளிவே!  என் எண்ணங்களுக்கு அடி ஊற்றாய் அமைந்து உண்ண உண்ணத் தெவிட்டாத உணவே! எல்லாம் உடையானே!

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேயோ  என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

"வெவ்வேறு திரிவுகளை உடைய ஊன் உடம்பிற்குள்ளே இருப்பதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! எம் ஐயனே! அரனே! ஓ!" என்று கூவிக் கூவிப் பாடிப் புகழ்ந்திருந்து பொய்ப்  பதமான உலகப்பற்று ஒழித்து மெய்ப் பதமான சிவபதம் பெற்றவர்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து வினைப்பயன்களால் உண்டாகும் பிறவிகளை அடையாமல், வஞ்சப் புலன்களின் கூடாகிய உடலோடு வாழ்தலைக்  கட்டோடு அழிக்கின்ற வல்லமை பெற்றவனே! நள்ளிரவிலும் நடனத்தைப் பயின்றாடும் ஒலியோனே!

[ விடக்கு = ஊன். இறைநெறி விடுத்து பிற நெறி பற்றுதலால் கள்ளப்புலம் என்றார். ]

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

"திருச்சிற்றம்பலத்துள் கூத்தாடும் இறைவனே! உலகில் முதன் முதல் மக்கள் தோன்றிய தென்பாண்டி நாடான குமரிக்கண்டத்தோனே!  அல்லல் தருகின்ற பிறவிகளை   அறுத்து எறிபவனே! ஓ!" என்றவாறு சொல்வதற்கு அருமையான  இறைவனைப்  போற்றி வழுத்தி அவனுடைய திருவடிகளின் கீழ் இருந்து நான் சொல்லிய இந்தப் பாட்டின் பொருளினைப் பிழையற உணர்ந்து ஓதிச் சிவபெருமானை வழிபடுபவர்கள் அனைவரும் சிவபுரம் செல்வார்கள்! அவர்கள் சிவபுரச் செல்வர்கள்! எம்பெருமானாம்  சிவனின் அடிக்கீழ் எல்லாரும் போற்றிப் புகழ நிலைத்திருப்பார்கள்! 

திருச்சிற்றம்பலம்.

ஓம் சிவ போற்றி! 

Friday, December 22, 2017

திருக்குறள் பொருளுரை , பா.இளங்கோ

கடவுள் வாழ்த்து 
குறள்: 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் எல்லாம் ஆகிய இறைவனை முதலாகக் கொண்டிருக்கிறது.

குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாவிட்டால், ஒருவர் கற்ற கல்வியறிவினால் ஆகிய பயன்தான் என்ன?

குறள்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர்களின் உள்ளமாகிய மலரில் சென்றிருக்கும் இறைவனின் உயர்ந்த திருவடிகளை எண்ணி எண்ணி அவரோடு சேர்ந்தவர்கள், இந்த உலகில புகழோடு நீண்ட காலம் நிலைத்து வாழ்வார்கள்.

குறள்: 4
வேண்டுதல் வேண்டாமை  இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

எதுவுமே தேவைப்படாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை.

குறள்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மெய்ப்பொருளாகிய இறைவனோடு சேர்ந்து பிறர் புகழ நற்செயல்கள் செய்தவர்களிடம் அடுத்த பிறவி என்னும் இருளுக்கு ஏதுவான நல்வினை தீவினை ஆகிய இரண்டும் சேராது.

குறள்: 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறிகளின் வழியாகத் தோன்றும் ஆசைகளை அவித்த இறைவனுடைய தூய ஒழுக்க நெறியை உண்மையாகக் கடைப்பிடிப்பவர்கள், புகழோடு நீண்ட காலம் நிலைத்து வாழ்வார்கள்.

குறள்: 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு இணை இல்லாத இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து வாழ்பவர்களைத் தவிர மற்றவர்களால் மனக்கவலைகளையும் துன்பங்களையும்  போக்கிக் கொள்ள முடியாது.

குறள்: 8
அறவாழி அந்தணன்  தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும  இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து வாழ்பவர்களைத் தவிர மற்றவர்களால் பொருளும் இன்பமும் தேடுவதால் உண்டாகும் துன்பக் கடலைக் கடக்க முடியாது.

குறள்: 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

நாம் எண்ணி எண்ணிப் போற்றுகின்ற நற்பண்புகள் கொண்ட இறைவனின் திருவடிகளைப் பணியாத தலைகள், தத்தம் செயல்களைச் செய்யாத மெய், வாய், கண்,காது ,மூக்கு போல இருந்தும் பயன் இல்லாதவை.

குறள்: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கைக் கடலை நீந்திக் கடப்பார்கள். மற்றவர்களால் நீந்திக் கடக்க  முடியாது.

Wednesday, December 13, 2017

தமிழ்

தமிழ் என்னும் சொல்லின் பொருள் என்ன என்ற வினாவிற்கு அறிஞர் பலர் பல்வேறு வகையான விடைகளைத் தந்துள்ளனர். தம்+இழ் எனப் பிரித்து இனிமை உடையது தமிழ் என்றனர் பலர். தமி+ழ்  எனப் பிரித்து ழகர ஒலி பெற்றது தமிழ் என்றனர் சிலர். ஆனால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம்+இல் = தம்மில் என்ற சொல்லே தமிழ் என்று மருவியதாகக் கருதுகின்றார்.

உலகின் முதல் மாந்தனாகத் தோன்றியவன் தமிழன்.அவன் பேசிய மொழிக்குப் பெயர் இடாமலேயே வழங்கி வந்தான். வாணிகம் காரணமாக வெளிநாடு சென்றவன் அங்கு வேறு மொழிகள் வழங்குவது கண்டு தம் வீட்டு மொழியைத் தம்மில் மொழி என்று அழைத்தான். அதுவே தமிழ் எனத் திரிந்தது என்று பாவாணர் கருதுகிறார்.

தமிழின் திரிபு மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் கொரியன் மொழியை அந்த மொழி பேசுவோர் தம் மொழி என்னும் பொருள்பட ஹான்கூக் என்று வழங்குவது பாவாணரின் கருத்துக்கு அரண் சேர்க்கிறது.

Sunday, May 9, 2010

தாய்

இந்த உலகில் இணையற்றதாகவும் ஈடு செய்ய இயலாததாகவும் இருப்பது தாயின் அன்பு!

நம்மையெல்லாம் பத்து மாதங்கள் கருப்பையில் சுமந்து பெருந்துயர்பட்டுப்
பெற்றெடுத்தவர் நம் தாய். நம் மீது வெயில் படாமலும் காற்று வீசாமலும் பனி
பெய்யாமலும் மார்பிலும் தோளிலும் வயிற்றிலும் அணைத்துக் காத்தவர்.
நமக்குப் பசிக்கும்போதெல்லாம் பாலும் சோறும் பார்த்துப் பார்த்து
ஊட்டியவர். நம்மையெல்லாம் நீராட்டி நெற்றிக்குப் பொட்டிட்டுக் கண்ணுக்கு
மையிட்டுக் கையிலும் காலிலும் கழுத்திலும் காதிலும் அணிகள் பூட்டி அழகு
பார்த்து கன்னம் கிள்ளி உச்சி மோந்து கண்ணொடு கண் வாயொடு வாய் முகத்தொடு
முகம்வைத்துக் கொஞ்சி முத்தாடி ஏணையிலும் தொட்டிலிலும் இட்டுத்
தாலாட்டியவர்; நம்மைச் சீராட்டியவர்.

நாள்தோறும் வாயிலும் கையிலும் கொடுத்து நம்மையெல்லாம் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்துவந்தவர். நம்மை நோய் அணுகாது மருந்தளித்துப்
பக்கலிருந்து கண்ணை இமை காப்பதுபோல் காத்துநின்றவர். நமக்கு வந்த நோயைத்
தமக்கு வந்ததாய் எண்ணித் துடித்துப்போனவர். இரவில் நாம் தூங்குவதற்காகத்
தாம் தூங்காமல் விழித்திருந்தவர்.
தம் பிள்ளை தவறு செய்தாலும் குற்றம் இழைத்தாலும் அதனைக் குறையாய்
எண்ணாமல் எவரிடமும் கூறாமல், 'தம் பிள்ளை இப்படிச் செய்துவிட்டதே' என்று
துயர்பட்டுத் துன்பப்பட்டு அதைத் தீர்க்க வழி தேடியவர். இத்தகைய கண்கண்ட
தெய்வமாகிய நம் அன்னைக்கு நன்றிக்கடனாக நாம் என்ன செய்யப்போகின்றோம்?
செய்கின்றோம்?


இளமைக்காலத்தில் நாம் ஆசைப்பட்டுக் கேட்டனவற்றை எல்லாம் அவர் பாசத்துடன்
வழங்கியதுபோல், முதுமைக்காலத்தில் அவர் ஆசைப்பட்ட பண்டங்களை எல்லாம்
நம்மைக் கேட்கும்முன்பே குறிப்பறிந்து அவருக்கு வழங்கியிருக்கிறோமா?
"தாயிடப் பிள்ளையிடத் தானே மனம்மகிழ" என்பது நம் ஊர்ச் சொலவடை அல்லவா!


நம்மேல் ஈ பறவாமல் அவர் நம்மைக் காத்ததுபோல் அவர்மேல் தூசு பறவாமல் நாம்
பாதுகாக்கிறோமா?


தம் பிள்ளை படிப்பதிலும் பண்புடன் நடந்துகொள்வதிலும் பொருள் ஈட்டுவதிலும்
பிறர் போற்ற வாழ்வதிலும் வல்லவன் என்று உலகு புகழ்வதைத்தானே ஒவ்வொரு
தாயும் விரும்புகிறார்! நம்மைப் பெற்றபொழுதினும் அவர் பெரிதும் மகிழ்வது
அப்பொழுதுதானே! அதையாகிலும் செய்கின்றோமா?


இவை எல்லாம் செய்தாலும் தாயின் அன்பிற்கு ஈடாகாதுதான்! ஆயினும் தாயிடம்
நாம் பட்ட கடன் தீர்க்க இவை உதவும். தாயின் கடன்தீர்த்தற்கு முற்றும்
துறந்த துறவிகளும் முன்நின்றனர் என்பதனைத் தமிழ் இலக்கியம்
எடுத்துக்காட்டுகிறது. புகார் நகரத்தில் செல்வ வளம்மிக்க வணிகக்
குடும்பத்தில் பிறந்தவர் பட்டினத்தடிகள். இளமையிலேயே இறையருளால்
துறவியாகிவிட்டார். திரைகடலோடிச் செல்வம் தேடவேண்டிய தம் மகன்
துறவியானதில் பட்டினத்தாரின் தாய்க்குத் தாங்கமுடியாத வருத்தம். மகனின்
போக்கை மாற்றமுடியாத அவர் தமக்குப் பட்டினத்தார்தாம் கொள்ளி
வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தாயின் விருப்பத்தைத்
தள்ளமுடியாமல் ஏற்றுக்கொண்ட பட்டினத்தார் தாயின் நினைவாக நாண் ஒன்றினை
இடுப்பில் அணிந்துகொண்டார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இறைவனை
வழிபட்டுவந்த பட்டினத்தார்க்குத் திருவிடைமருதூரில் இருக்கும்போது
இடுப்பிலிருந்த நாண் அவிழ்ந்தது. தாய்க்கு இறுதி நெருங்கியதை உணர்ந்த
அடிகள் உடனே புகார் திரும்பினார். மரணப் படுக்கையில் இருந்த தாய் மகனைக்
கண்டதும் உயிர்நீத்தார். வாழை மரங்களை வரிசையாய் அடுக்கி அதன்மேல் தம்
தாயை வைத்து இறுதிக் கரணங்களைச் செய்யத்தொடங்கினார். அவர்தம் உள்ளக்
குமுறல் பாக்களாக உருவெடுத்தன.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்று

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி


முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்தி பகலாய்எனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன்


வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்


நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்


அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தமக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகி ழாமல் - உருசியுள்ள
தேனே அமிழ்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு


அள்ளிஇடுவது அரிசியோ அன்னை தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகம்மேல் முகம்வைத்து
முத்தாடி "என்றன்
மகனே" என அழைத்த வாய்க்கு

என்று அடிகள் உள்ளம் கரைந்து உருகினார்.


முன்னை இட்டதீ முப்பு ரத்திலே
பின்னை இட்டதீ தென்னி லங்கையில்
அன்னை இட்டதீ அடி வ யிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே


என்று சொல்லிக் கொள்ளி வைத்தவுடன் பச்சைமரம் பற்றி எரிந்தது!


வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுமே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை


வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்து என்
ற(ன்)னையே ஈன்றெடுத்த தாய்


வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

என்று தம் கடன்முடித்துச் சென்றார் அடிகள்.ஊரும் நிலையல்ல உற்றார்
நிலையல்ல என்று பாடிய பட்டினத்தடிகள் தாயன்பை நினைந்து பாடிய இந்தப்
பாடல்கள் மக்களின் குரலாக என்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும்!

Friday, August 28, 2009

வாலறிவன்

இறைவன் தாள் தொழாவிட்டால் கற்றதனால் ஆய பயன் என்? என்கிறார் வள்ளுவர்.
கடவுளுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு?
கடவுள் முழுமையான அறிவுடையவர். வாலறிவர்! நாமோ குறை அறிவுடையவர்கள்.
அறிவு, அறிவை இனம் காணவேண்டாமா? பாம்பின் கால் பாம்பு அறியுமல்லவா!

Saturday, August 15, 2009

ஒப்புரவு

"ஒப்புரவு ஒழுகு" என்னும் ஆத்திசூடிப் பாவிற்குப் பொருள் உரைப்போர், "உலக வழக்கத்தைக் கடைப்பிடி" என்கின்றார்கள். "ஒப்புரவு அறிதல்" என்னும் திருக்குறள் அதிகாரத்திற்கு விளக்கம் தருவோர், "உலக நடைக்கேற்ற உதவிகளைத் தெரிதல்" என்று உரைக்கின்றனர். இந்த இரண்டு பொருள்களும் முழுமையானதல்ல. அப்படியானால், "ஒப்புரவு" என்பதன் பொருள்தான் யாது? ஒரே குமுகாயமாகச் சேர்ந்து வாழவேண்டியவர்கள் மாந்தர்கள். எவரும் தனித்து வாழ்தல் என்பது இயலாத ஒன்று. மக்கள் எல்லாரும் ஒன்றுபட்டு வாழவேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் உதவி வாழ்தல் வேண்டும். தம்மை ஒப்பப் பிறரையும் புரப்பதே - பேணுவதே - காப்பாற்றுவதே "ஒப்புரவு" எனப்படும். அவ்வாறு உதவி வாழ்பவனே மாந்தன் எனப்படுவான். பிறர்க்கு உதவி செய்யாமல் தனித்து வாழ்பவனை - தான் மட்டும் வாழ்பவனை மற்றவர்கள் ஒரு பொருளாக- உயிராகக்கூட மதிக்கமாட்டார்கள். 'பிணம்' என்றே கருதுவர். இதனையே வள்ளுவர், "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்". (குறள்.214) என்று கூறியுள்ளார். "ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவு இங்கு என்னாகும்" (பெருந்தொகை.188).